கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
செங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
செங்கோட்டை:
செங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி பேராசிரியர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ரெயில்வே கேட் இ.கே.தேவர் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், செல்லத்துரை (வயது 28) என்ற மகனும் இருந்தனர்.
செல்லத்துரை, சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் மன வேதனையில் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு மாடியில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் விரைந்து சென்று செல்லத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தார்.
காதல் தோல்வியா?
இது சம்பந்தமாக குற்றாலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அலெக்ஸ் ராஜா தீவிர விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.
செல்லத்துரைக்கும், அவர் வேலைபார்த்த கல்லூரியில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் சில மாதங்களாக செல்லத்துரையுடன் பழகுவதை நிறுத்தி கொண்டாராம். இதனால் மனம் உடைந்த செல்லத்துரை அந்த பெண்ணை மறக்க முடியால் மது குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் ஏற்கனவே மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது 4-வது முறையாக தூக்குப்போட்டதில் இறந்துள்ளதாகவும் போலீசார் ெதரிவித்தனர். எனவே காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்தாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.