அரசு பள்ளி கதவை உடைத்த கல்லூரி மாணவர் கைது
கண்டாச்சிபுரம் அருகே அரசு பள்ளி கதவை உடைத்த கல்லூரி மாணவர் கைது வீடியோ வைரல் ஆனதால் போலீசாரிடம் சிக்கினார்
கண்டாச்சிபுரம்
அரசு நடுநிலைப்பள்ளி
கண்டாச்சிபுரம் அருகே உள்ள பீரங்கிபுரம் கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பள்ளி விடுமுறை நாளில் அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர் பள்ளி வகுப்பறையின் கதவு மீது பெரிய கல்லை தூக்கிப்போட்டு உடைத்துக்கொண்டிருந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் விரைந்து வந்து அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டேன் என்று கூறி தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்களும் அவரை மன்னித்து விட்டு விட்டனர்.
வீடியோ வைரல் ஆனது
இந்த நிலையில் வகுப்பறை கதவில் வாலிபர் ஒருவர் கல்லை தூக்கிப்போட்டு உடைப்பதும், அதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுப்பது போன்ற வீடியோ காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதை பார்த்த ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ கண்டாச்சிபுரம் போலீசாரின் பார்வைக்கு வந்ததை அடுத்து அதில் தோன்றிய வாலிபர் குறித்து தீவிர விசாரணை நடத்த தொடங்கினா். விசாரணையில் அவர் பீரங்கிபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் ஏழுமலை(வயது 20) என்பதும், அவருடன் இருந்தவர்கள் கோவை பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் துரை மகன் நாராயணன் மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தொியவந்தது.
மாணவர் கைது
இதையடுத்து வகுப்பறையின் கதவை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ரேவதி கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் உள்பட 3 பேர் மீதும் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். இவர் தற்போது திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ஆனதால் கல்லூரி மாணவர் கைதான சம்பவம் பீரங்கிபுரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.