காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி மீது தாக்குதல்
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை குளச்சல் பஸ்நிலையத்தில் வைத்து தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை குளச்சல் பஸ்நிலையத்தில் வைத்து தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ஒரு இளம்பெண் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.
குளச்சல் பஸ்நிலையத்தில் மிடாலம் ஜீவஜோதி நகரை சேர்ந்த ரிசிபன்(வயது30) என்பவர் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அவர் அந்த கல்லூரி மாணவியை ஒரு தலையாய் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
கன்னத்தில் அறைந்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி கல்லூரி செல்வதற்காக வழக்கம்போல் குளச்சல் பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்து நின்றார்.
அப்போது அங்கு வந்த ரிசிபன் மாணவியிடம் சென்று 'நீ என்னை காதலிக்க மாட்டயா?' என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென்று அந்த மாணவியை ரிசிபன் கன்னத்தில் அறைந்தார். மேலும் மாணவி அணிந்திருந்த கல்லூரி சீருடையை கிழித்து மிரட்டல் விடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத மாணவி கதறி அழுதார்.
இதைகண்டதும் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ரிசிபன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து மாணவி குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் அத்துமீறிய ரிசிபனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.