படிக்கட்டில் தொங்கியதை தட்டிக்கேட்டஅரசு பஸ் கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர்விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரத்தில் படிக்கட்டில் தொங்கியதை தட்டிக்கேட்ட அரசு பஸ் கண்டக்டரை கல்லூரி மாணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து கலித்திராம்பட்டுக்கு நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ், ரெட்டியார் மில் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த நிறுத்தத்தில் இருந்து அரசு கல்லூரி மாணவர்கள் பலரும் ஏறினர். அவர்களில் சில மாணவர்கள், பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.இதைப்பார்த்த பஸ் கண்டக்டரான பெருங்கலாம்பூண்டி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 45) என்பவர், அந்த மாணவர்களிடம் பஸ்சின் உள்ளே வருமாறு கூறினார். ஆனால் அதை அம்மாணவர்கள் பொருட்படுத்தாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். தொடர்ந்து, கண்டக்டர் சொல்லிப்பார்த்தும் அந்த மாணவர்கள் கேட்கவில்லை. ஒருகட்டத்தில் பஸ் கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாணவர், திடீரென பஸ் கண்டக்டர் கோவிந்தசாமியின் கன்னத்தில் பளார் அறை விட்டார். உடனே அவர், பஸ்சை அங்கேயே நிறுத்தி அம்மாணவர்களை கீழே இறக்கிவிட்டு இதுபற்றி நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவர்களிடமும், பஸ் கண்டக்டரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அங்கிருந்து அந்த பஸ் புறப்பட்டுச்சென்றது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.