`நீட்' தேர்வு எழுத முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை


`நீட் தேர்வு எழுத முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை
x

மண்ணச்சநல்லூர் அருகே `நீட்' தேர்வு எழுத முடியாததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே `நீட்' தேர்வு எழுத முடியாததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காட்டுக்குளம் சத்திரப்பட்டி அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுமிதா.

இந்த தம்பதிக்கு சுவேதா (வயது 22), எஸ்திகா (20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் எஸ்திகா நாமக்கல்லில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் `நீட்' தேர்வுக்காக படித்து வருகிறார். சுவேதா (22) திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பதில் இல்லை

இந்த நிலையில் தங்கையைப் போல தானும் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து `நீட்' தேர்வு எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இதுகுறித்து பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது. அதற்கு பெற்றோர் சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன விரக்தி அடைந்த நிலையில் இருந்த சுவேதா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் போலீசுக்கு தெரியாமல் சுவேதாவின் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் சுவேதா மரணம் பற்றி மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

வழக்கு

இதைத்தொடர்ந்து போலீசார் சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை, செய்த மாணவியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்க செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story