காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருேக உள்ள சின்ன சேங்கல் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் முகேஷ் (வயது 19). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் முகேஷ் நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் மாயனூர் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, முகேஷ் ஆழமாக பகுதிக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக்கண்ட சக நண்பர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் அங்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய முகேசை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.