தேனி அருகே வைகை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
தேனி அருகே வைகை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
தேனி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டியை சேர்ந்தவர் மாயாண்டி. அவருடைய மகன் விக்னேஷ் (வயது 19). இவர், கோட்டூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ. (தமிழ்) 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை இவர், அப்பகுதியில் வைகை ஆற்றின் கரையில் உள்ள தனது தோட்டத்தில் மிளகாய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வேலையை முடித்துவிட்டு அவர், அங்குள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே குளிக்க சென்ற மகனை காணாததால் மாயாண்டி வைகை ஆற்று பகுதிக்கு வந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆற்றில் இறங்கி மகனை தேடினார். அப்போது விக்னேஷ் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த க.விலக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விக்னேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வைகை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அரப்படிதேவன்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.