சேலம் கந்தம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி நண்பர் படுகாயம்
சேலம் கந்தம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
அன்னதானப்பட்டி
தடுப்பு சுவரில் மோதியது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் கதிரவன் (வயது 19). சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் உஸ்மான் அலி. இவரது மகன் சல்மான் (19). இவர்கள் 2 பேரும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் உடன் படிக்கும் நண்பர் வீட்டு திருமணத்திற்காக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் 2 பேரும் மீண்டும் சேலம் வழியாக கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பட்டர்பிளை மேம்பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
மாணவர் சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கதிரவன் தூக்கி வீசப்பட்டு பாலத்தின் மேற்பகுதியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சல்மான் படுகாயத்துடன் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது கதிரவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. சல்மானுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.