குமரியில் மேலும் ஒரு பயங்கர சம்பவம்: மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலையா?;காதலனை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு
குமரியில் மேலும் ஒரு பயங்கர சம்பவமாக மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டாரா? போலீசில் பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் காதலனை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொல்லங்கோடு,
குமரியில் மேலும் ஒரு பயங்கர சம்பவமாக மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டாரா? போலீசில் பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் காதலனை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் ஒரு பயங்கர சம்பவம்
குமரி மாவட்டத்தில் மாணவர் ஷாரோன்ராஜை, அவரது காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அவர் காதலனை சந்தித்த போதெல்லாம் மெல்ல, மெல்ல கொல்லும் விஷத்தை குளிர்பானத்தில் கலந்து ெகாடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கிரீஷ்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த பரபரப்பு விசாரணை ஒரு புறம் மும்முரமாக நடக்க, குமரி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இதேபோன்று மேலும் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மாணவி மர்ம சாவு
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை புளியறத்தலை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது 54). இவருடைய 3-வது மகள் அபிதா (19). களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி வயிற்றுவலியால் அவர் அவதிப்பட்டார். உடனே பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் 5-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நிலவியது. அபிதா ஒருவரை காதலித்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.
தாய் பரபரப்பு புகார்
பின்னர் இதுதொடர்பாக மாணவியின் தாயார் தங்கபாய் (51) நித்திரவிளை போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நித்திரவிளை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக எனது மகளை காதலித்து வந்தார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வந்த அவர், கடந்த செப்டம்பரில் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் எனது மகள் மனம் உடைந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் தனியறையில் முடங்கி கிடந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி அந்த வாலிபர், எனது மகளை தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என அழைத்து சென்றார். அதன் பிறகு தான் எனது மகளின் உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போனது.
மெல்ல, மெல்ல கொல்லும் விஷத்தை குளிர்பானத்தில் கலந்து எனது மகளுக்கு காதலன் கொடுத்திருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனையில் 'திடுக்' தகவல்
இதற்கிடையே திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் அபிதாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அபிதாவின் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
மஞ்சள் காமாலை போன்ற நோய் வந்தால் கூட இந்தளவுக்கு பாதிப்பு ஏற்படாது. மெல்ல, மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்திருக்கலாம். இதனால் தான் அவர் உடல்நிலை மோசமாகி இறந்துள்ளார் என பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
காதலனிடம் விசாரணை நடத்த முடிவு
இதனால் காதலன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவி அபிதாவுடன் வாலிபருக்கு இருந்த காதல் அவருடைய பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் அந்த வாலிபர் அபிதாவை ஒதுக்க தொடங்கியதும் அவர்களுக்்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் காதலன் மீது அபிதா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்போது படிப்பு முடிந்த பிறகு இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகும் காதலன், அபிதாவை ஏற்றுக் கொள்ளாமல் கழற்றி விடும்படி நடந்து வந்துள்ளார். இந்தநிலையில் திடீரென்று ஒரு நாள் தனிமையில் சந்தித்த போது அபிதாவுக்கு காதலன் மெல்ல, மெல்ல கொல்லும் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்திருக்கலாம்? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் காதலனை சந்தித்த சில நாட்களில் இருந்தே அபிதாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனை மாணவியின் தாயும் புகாராக கொடுத்துள்ளார்.
மர்ம முடிச்சுகள் அவிழும்
இதனால் காதலனை பிடித்து விசாரணை நடத்தினால் தான் அபிதாவின் சாவில் இருந்த மர்ம முடிச்சுகள் அவிழும் என கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் மெல்ல, மெல்ல கொல்லும் விஷத்தை ஏதாவது ஒரு பானத்தில் கலந்து கொடுக்கும் கலாசாரம் குமரியில் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.