மோட்டார் சைக்கிள்கள் மோதி கல்லூரி மாணவர் பலி; 3 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதி கல்லூரி மாணவர் பலி; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Jan 2023 10:59 PM GMT (Updated: 2023-01-14T16:22:04+05:30)

குளச்சலில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கல்லூரி மாணவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சலில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கல்லூரி மாணவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கல்லூரி மாணவர்

குளச்சல் அருகே வாணியக்குடி ஆனப்பான்குழியை சேர்ந்தவர் ஜூடி. இவருடைய மகன் ஜெபின் (வயது 19) வெள்ளமோடி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் ஜெபின் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளின் பின்னால் கோடிமுனையை சேர்ந்த சக மாணவர் ஜெனிஸ்டன் உட்கார்ந்திருந்தார். இந்த மோட்டார் சைக்கிள் குளச்சல் பெரிய பள்ளி முக்கு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது.

விபத்தில் சாவு

அப்போது எதிரே புத்தளம் சேதுபதிவூரை சேர்ந்த தொழிலாளி குமார் (57) என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். பின்னால் சரவணன் உட்கார்ந்திருந்தார்.

இந்தநிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடையார்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபின் பரிதாபமாக இறந்தார்.

ஜெனிஸ்டன், குமார், சரவணன் ஆகிய 3 பேருக்கும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story