விழுப்புரத்தில் தோஷம் கழிப்பதாக கூறிகல்லூரி மாணவியிடம் 5 பவுன் நகை அபேஸ்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரத்தில் தோஷம் கழிப்பதாக கூறிகல்லூரி மாணவியிடம் 5 பவுன் நகை அபேஸ்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கல்லூரி மாணவியிடம் தோஷம் கழிப்பதாக கூறி 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒறையூரை சேர்ந்த திருமணமான 19 வயதுடைய மாணவி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தார்.

பின்னர் மாலையில் கல்லூரி முடிந்து மீண்டும் வீட்டுக்கு செல்ல, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு பஸ்சிற்காக காத்து நின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அம்மாணவியிடம் சென்று உனது கணவருக்கு யாரோ பில்லி, சூனியம் வைத்துவிட்டதாகவும், தோஷம் கழித்தால் சரியாகிவிடும் என்றும், தான் தோஷம் கழிப்பதாகவும், தன்னுடன் வருமாறுகூறி விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார்.

5 பவுன் நகை அபேஸ்

அங்கு துணி எடுத்துக்கொண்டு வெளியே வந்த அந்த நபர், பரிகாரம் செய்யக்கூடிய துணியை பார்க்கக்கூடாது என்று மாணவிக்கு தெரியாமல் வைத்துக்கொண்டார். பின்னர் மஞ்சள் கயிறு வாங்க வேண்டும் என்றுகூறி அங்கிருந்து அம்மாணவியை விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு கடைக்கு அழைத்துச்சென்றார். அங்கு மஞ்சள் கயிறு வாங்கிய பின்னர், அம்மாணவியிடம் நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிச்சங்கிலியை கழற்றித்தரும்படி அந்த நபர் கூறியுள்ளார்.

அதன்படி மாணவியும், தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அதை பெற்ற அந்த நபர், நான் பரிகாரம் செய்யப்போவதாகவும், அதனை நீங்கள் பார்க்கக்கூடாது என்றும் சற்று தள்ளி நிற்குமாறும் கூறியுள்ளார். இவ்வாறாக மாணவியின் கவனத்தை திசைதிருப்பிய அந்த மர்ம நபர், தங்கச்சங்கிலியை நைசாக அபேஸ் செய்துகொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். நகையை பறிகொடுத்த அம்மாணவி, கூச்சலிட்டு கதறி அழுதார். அந்த நபரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அம்மாணவி, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், நகரில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நகையை பறிகொடுத்த மாணவி, குற்றம் நடைபெற்ற இடத்தை சரியாக சொல்லாமல் குழப்பத்தில் மாறி, மாறி ஒவ்வொரு இடமாக குறிப்பிட்டு சொன்னார். இதனால் முதலில் தாலுகா, மேற்கு, நகர என்று 3 போலீஸ் நிலையத்துக்கும் அலைந்து திரிந்தார்.

கடைசியாக நகர போலீசார், புகார் மனுவை பெற்று, மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story