புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் சாப்பாடு தட்டுடன் தர்ணா
புதுக்கோட்டையில் விடுதியில் உணவு தரமில்லை என புகார் தெரிவித்து கல்லூரி மாணவர்கள் சாப்பாடு தட்டுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.
மாணவர்கள் தர்ணா
புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் மன்னர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அதிகம் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லை எனவும், மாணவர்களுக்கு சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க தரப்படும் நிதியை நிர்வாகம் தருவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் விடுதியை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் நேற்று காலை கையில் சாப்பாடு தட்டுடனும், காலை உணவாக பரிமாறப்பட்ட சாதத்துடன், அண்டாவை தூக்கிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி கருணாகரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், விடுதியில் உணவு தரத்துடன் போடுவதில்லை. மெனுவில் இருப்பது போன்று உணவு வினியோகிக்கப்படுவதில்லை. உணவு தொடர்ந்து தரமில்லாமல் வினியோகிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து தரத்துடன் உணவு வழங்கப்படும் எனவும், பட்டியலில் உள்ளபடி உணவு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.