கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழோடு பயணிக்க வேண்டும்
கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழ் இலக்கியங்களை அறிந்து கொண்டு தமிழோடு பயணிக்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த தமிழ் கனவு சொற்பொழிவு எனும் நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன் பேசினார்.
தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் திண்டுக்கல் பார்வதீஸ் கலைக்கல்லூரியில் தமிழ் கனவு சொற்பொழிவு எனும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் 'தொட்டு தொடரும் நம்ம நவீன இலக்கிய மரபு' எனும் தலைப்பில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனும், 'தமிழர் வாழ்வு புனைவுகள் வழியே' எனும் தலைப்பில் எழுத்தாளர் செல்லத்துரையும் பேசினர். நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன் பேசியதாவது:-
தமிழரின் மரபு, நாகரிகம், பெண்கள் மேம்பாடு, மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தமிழ் கனவு சொற்பொழிவு நடத்தப்படுகிறது. கடந்த காலங்களை விட தற்போது படித்த இளைஞர்களை கொண்ட போட்டிகள் நிறைந்த உலகமாக இருக்கிறது. எனவே கல்வியுடன் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் இலக்கியங்கள்
உயர்கல்வி, வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரி மாணவ-மாணவிகள் சிறந்த சக்திமிக்க செயல்பாடுகளுடன் திகழ வேண்டும். மாணவ-மாணவிகள் திறமையை வளர்த்து கொள்வதோடு, நமது பாரம்பரியம், நாகரிகம், கலாசாரம், தமிழ் இலக்கியங்களை அறிந்து கொள்ள வேண்டும். திருக்குறளில் நமக்கு தேவையான அத்தனை விவரங்களும் உள்ளன.
கல்லூரி மாணவ-மாணவிகளாக நீங்கள் தமிழோடு பயணிக்க வேண்டும். நல்ல புத்தகம் படிப்பதால் அறிவு மற்றும் ஆளுமையை அதிகரிக்கலாம். அரசுத் துறையில் அதிக அளவிலான பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வழங்குவதால் பெண்களின் உயர் கல்வி அதிகரித்து இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியங்கா, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தமிழ் இணைய கல்வி கழக ஆய்வு அதிகாரி காந்திராஜன், திண்டுக்கல் பார்வதீஸ் கலைக்கல்லூரி முதல்வர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.