கல்லூரிகளில் பி.காம். படிப்புகளுக்கு 'கிராக்கி'
அரியலூர் மாவட்டத்தில் உள்ள முன்னணி கல்லூரிகளில் பி.காம். படிப்புகளுக்கான இடங்கள் பெறுவதில் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது.
கட்-ஆப் மதிப்பெண் இலக்கு உயர்வு
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 8 ஆயிரத்து 739 பேரில், 8 ஆயிரத்து 466 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.88 ஆகும். அரியலூர் மாவட்டத்தில் இயற்பியல் பாடத்தில் 35 பேரும், பொருளாதாரம் பாடத்தில் 4 பேரும், வேதியியல் பாடத்தில் 154 பேரும், வணிகவியல் பாடத்தில் 45 பேரும், உயிரியியல் பாடத்தில் 227 பேரும், தாவரவியல் பாடத்தில் 6 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 75 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 32 பேரும், கணித பாடத்தில் 38 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 2 பேரும், வரலாறு பாடத்தில் 11 பேரும், கணினி தொழில்நுட்பம் பாடத்தில் ஒருவரும், கணினி பயன்பாடு பாடத்தில் 25 பேரும், விலங்கியல் பாடத்தில் 13 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதமும், 100 சதவீத மதிப்பெண் பெற்றவர்களின் விகிதமும் அதிகரித்து இருக்கிறது. 'பர்ஸ்ட் குரூப்' படிக்கும் மாணவர்களின் இலக்கு மருத்துவம் அல்லது என்ஜினீயரிங் படிப்பில் திரும்பி இருக்கிறது. 'தேர்டு குரூப்' படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோரது இலக்கு பி.காம். படிப்புகளை நோக்கியே இருக்கும்.
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் கலைப்பிரிவு படிப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவர்களின் இந்த அளப்பரிய மதிப்பெண்களையொட்டி, பெரும்பாலான கல்லூரிகள் தங்களது கட்-ஆப் இலக்கை உயர்த்தி இருக்கிறார்கள். இந்த ஆண்டு தேர்வு முடிவின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள்.
முன்னணி கல்லூரிகளில் இடங்களுக்கு 'கிராக்கி'
அரியலூர் மாவட்டத்தில் உள்ள முன்னணி கலை கல்லூரிகள் பி.காம். படிப்புக்கான கட்-ஆப் இலக்காக 100 சதவீத மதிப்பெண்களை அறிவித்துள்ளனர். அதாவது வணிகவியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம், பொருளியல் பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். பல கல்லூரிகள் 99.5 சதவீதம் என்றும், இன்னும் சில கல்லூரிகள் 99 சதவீதம் என்றும் தங்களது கட்-ஆப் இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள்.
இதனால் நல்ல மதிப்பெண்கள் குறிப்பாக கட்-ஆப்பில் நல்ல மதிப்பெண் சதவீதத்தை கொண்டவர்களுக்கு முதல் பட்டியலிலேயே இடங்கள் கிடைப்பது எளிதாகி இருக்கிறது. அதேவேளை இடஒதுக்கீடு அடிப்படையிலும் இந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 95 முதல் 98 சதவீத கட்-ஆப் மதிப்பெண்கள் இருந்தாலும் முன்னணி கல்லூரிகளில் இடம் மறுக்கப்படுகிறது அல்லது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பி.காம். படிப்புகளுக்கும் கடும் 'கிராக்கி' ஏற்பட்டு இருக்கிறது.
போட்டா போட்டி
உதாரணத்துக்கு 3 ஆயிரம் இடங்கள் கொண்ட கல்லூரிக்கு, 30 ஆயிரத்தை தாண்டியும் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் முழுமையான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு முன்னுரிமையும், அதனைத்தொடர்ந்து மதிப்பெண்கள் குறைந்தவர்களுக்கு இடங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 96 முதல் 98 சதவீதம் வரை வைத்திருந்த கல்லூரிகள் கூட, இந்த ஆண்டு 99 சதவீதமாக தங்களது கட்-ஆப்பை உயர்த்தி இருக்கிறார்கள்.
பி.காம் போல் பி.சி.ஏ. மற்றும் பி.எஸ்.சி. இடங்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்களும் உயர்ந்திருக்கிறது. இதனால் அந்த இடங்களுக்கும் 'போட்டா போட்டி' என்ற நிலையே நிலவுகிறது. இப்படி, இந்த ஆண்டு கலை பாட பிரிவுகளுக்கான இடங்கள் பெறுவதில் மாணவர்களுக்கு தவிப்பை உண்டாக்கி இருக்கிறது.