தாறுமாறாக ஓடிய கல்லூரி பஸ், பள்ளி வேன் உள்பட வாகனங்களில் மோதல்


தாறுமாறாக ஓடிய கல்லூரி பஸ், பள்ளி வேன் உள்பட வாகனங்களில் மோதல்
x

திருச்சியில் தாறுமாறாக ஓடிய கல்லூரி பஸ், பள்ளிக்கூட வேன் உள்பட வாகனங்களில் அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி

மலைக்கோட்டை, ஆக.27-

திருச்சியில் தாறுமாறாக ஓடிய கல்லூரி பஸ், பள்ளிக்கூட வேன் உள்பட வாகனங்களில் அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாலிடெக்னிக் கல்லூரி பஸ்

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி பஸ் நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

கல்லூரி பஸ்சை திருச்சி தென்னூர் பிஷப்ரோட்டை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் ெரயில்வே மேம்பாலத்தில் ஏறி, இறங்கும்போது அதன்வேகம் அதிகமாக இருந்துள்ளது. பஸ்சின் வேகத்தை டிரைவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அடுத்தடுத்த வாகனங்களில் மோதல்

இதையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் என அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதுடன் நிற்காமல் எதிரே வந்த ஏ.ேக.கே.வி. என்ற தனியார் பள்ளி வேன் மீதும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், பள்ளி வேன் சேதம் அடைந்தன. அதுமட்டுமின்றி இந்த விபத்தில் லால்குடி எசனக்கோரை பகுதியை சேர்ந்த பள்ளி வேன் டிரைவர் மணிகண்டன் (வயது 46), பள்ளி மாணவர்கள் திருவானைக்காவல் அஸ்வின் கிருஷ்ணன் (13), யோசிதா (9), வாளாடி அபிராமி (11), தாளக்குடி சர்வேஷ் (10) மற்றும் சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த வீரேஷ்வரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (66), திருவானைக்காவல் காந்திரோடு கோபி (48), இந்திராணி (65), மொட்ட கோபுரம் பாஸ்கர் (41) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

படுகாயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு நெற்றி, கை, கால், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக நேற்று திருவானைக்காவல்-ஸ்ரீரங்கம் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக இது குறித்து தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள் ரெனி, ஏட்டு பாஸ்கர் மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி வேன் டிரைவர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story