மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை-மகன் உள்பட 3 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் தந்தை-மகன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள வானதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 50). கூலி தொழிலாளியான இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் இடையார் செல்லும் பிரிவு சாலையில் சென்றார். அப்போது எதிரே ஏந்தல் கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி(45), அவரது மகன் ராஜ்குமாருடன்(20) மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்நிலையில் சங்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், கணேசமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சங்கர் மற்றும் கணேசமூர்த்திக்கு கால் முறிந்தது. மேலும் ராஜ்குமாருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.