மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் பலி
ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
நாட்டறம்பள்ளியை அடுத்த ஏரிக்கோடி, தாயப்பகவுண்டர் தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் சம்பத்குமார் (வயது 33). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி அகிலா என்கிற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். சம்பத்குமார் தனது தந்தை திருப்பத்தூர் பகுதியில் பல்வேறு வகையான விவசாய தானியங்கள் வியாபாரம் செய்து வருகிறார்.
வியாபாரம் செய்த பணத்தை தனது தந்தையிடம் இருந்து வாங்கி வருவதற்காக நேற்று மதியம் சம்பத்குமார் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் சென்றார். அங்கு பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். ஜோலார்பேட்டை அருகே உள்ள கட்டேரி அம்மன் கோவில் அருகில் நாட்டறம்பள்ளி சாலையில் சென்றபோது, திரியாலம் அடுத்த டி.வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் கோகுல் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சம்பத்குமாரின் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
என்ஜினீயர் பலி
அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களில் சம்பத்குமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. கோகுல் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சம்பத்குமாரின் தந்தை சங்கரன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.