மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்.
காட்டுப்புத்தூர்:
என்ஜினீயரிங் மாணவர்
நாமக்கல் மாவட்டம், முட்டாஞ்செட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகபர்தீன். இவரது மகன் ஹசின்அப்துல்லா(வயது 20). இவர் திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந் தேதி கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் முட்டாஞ்செட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
நாமக்கல் - திருச்சி சாலையில் காட்டுப்புத்தூரை அடுத்த ஏலூர்பட்டி உப்பாத்து பாலம் அருகே வந்தபோது, எதிரே ஏழூர்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சேகர் (70) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஹசின்அப்துல்லாவின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட ஹசின்அப்துல்லா படுகாயமடைந்தார். சேகருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஹசின்அப்துல்லா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.