மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் விவசாயி உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 45). விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் சென்றுவிட்டு, பின்னர் பாண்டகப்பாடி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது நெற்குணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(32) என்பவர், கிருஷ்ணாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வெண்பாவூருக்கும், கிருஷ்ணாபுரத்திற்கும் இடையே வந்தபோது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கனகராஜுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.