மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறை வார்டன் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறை வார்டன் பலி
x

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் திண்டுக்கல் சிறை வார்டன் பலியானார்.

திண்டுக்கல்

சிறை வார்டன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 26). இவர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். பால்பாண்டி பணி முடிந்து திண்டுக்கல்லில் இருந்து பெருமாள்கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் குண்டலப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, அவர் மோட்டார் சைக்கிள் மீது விளாம்பட்டியில் இருந்து நிலக்கோட்டை நோக்கி வந்த கே.புதூரை சேர்ந்த அசரத் அலி (37) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பால்பாண்டியும், அசரத் அலியும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பால்பாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பால்பாண்டி பரிதாபமாக இறந்தார்.

அசரத் அலி மேல் சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்தில் பலியான பால்பாண்டிக்கு காயத்ரி என்ற மனைவியும், கவினேஷ் பாண்டி என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். பணி முடிந்து ஊருக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி சிறை வார்டன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story