வேன்கள் மோதல்; 2 பேர் படுகாயம்
அய்யலூர் அருகே வேன்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொடைக்கானலில் இருந்து சவ்சவ் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்குவேன் ஒன்று சென்னை கோயம்பேடுக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. கொடைக்கானல் பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி (வயது 30) என்பவர் வேனை ஓட்டி சென்றாார். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் கடவூர் பிரிவு அருகே வேன் வந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த பால் வேன் மீது சரக்கு வேன் மோதியது. இதில் வேன்களும் சாலையில் கவிழ்ந்தன. மேலும் வேன்களில் இருந்த சவ்சவ் மூட்டைகள், பால் கேன்கள் சாலையில் விழுந்தன.
இதில் தங்கப்பாண்டி மற்றும் பால் வேன் டிரைவரான அய்யலூர் அருகே உள்ள பாலம் பூசாரியூரைச் சேர்ந்த பெருமாள் (30) ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.