நொய்யல் ஆற்றில் வாகன இறங்கு தளம் அமைப்பு
நொய்யல் ஆற்றில் வாகன இறங்கு தளம் அமைப்பு
திருப்பூர்
திருப்பூர் நொய்யல் ஆற்றில் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து புதர் மண்டி காணப்படும் நேரங்களிலும், சேறு, சகதியுடன் குப்பைகள் அதிகம் குவிந்து கிடக்கும் நேரங்களிலும் ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இது போன்ற நேரங்களில் ஆற்றின் உள்ளே இந்த வாகனங்களை இறக்குவதற்காக கரைகளை சேதப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே இதை தவிர்க்கும் பொருட்டு நொய்யல் ஆற்றில் ஆங்காங்கே வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது கஜலட்சுமி தியேட்டரின் அருகே ஆற்றங்கரையில் அகலமான கான்கிரீட் இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று வளம் பாலம் அருகேயும், மற்றும் சில இடங்களிலும் நொய்யல் ஆற்றங்கரையில் இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பாதைகள் அமைக்கப்படுவதால் கரைகளின் சேதம் தடுக்கப்படுவதுடன், வாகனங்கள் எளிதாக ஏறி இறங்க வசதியாக இருக்கும். மேலும் தூர்வாரும் பணியும் விரைவாக நடைபெறும்.