காமெடி நடிகரை கடத்திய விவகாரம்: பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது
காமெடி நடிகரை கடத்திய வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை தபால்தந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). இவர் தனியார் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற காமொடி நிகழ்ச்சியில் நடித்து புகழ் பெற்றவர். அதன் மூலம் இவர் பல திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் வலம் வந்தார். கடந்த மாதம் அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று தாக்கியது. பின்னர் அந்த கும்பல் இணையதளத்தில் மோடியை பற்றி தவறாக பதிவிட்டால் இந்த கதி தான் என்று கூறி விட்டு தப்பியது. இதுகுறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாணையில், இந்த சம்பவத்தில் அவரது மனைவிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து நடிகரின் மனைவி பானுமதி, டிரைவர் மோகன், ராஜ்குமார், பா.ஜ.க. பட்டியலணியை சேர்ந்த வைரமுத்து, செல்லூர் பகுதி மண்டல தலைவர் மலைச்சாமி (35), கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் மதுரை பா.ஜ.க. விளையாட்டு பிரிவை சேர்ந்த வக்கீல் தமிழ்சங்கு, ஊமச்சிக்குளத்தை சேர்ந்த துளசி ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதன் மூலம் இந்த சம்பவத்தில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.