ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நள்ளிரவில் குவிந்த கமாண்டோ படை வீரர்கள்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நள்ளிரவில் குவிந்த கமாண்டோ படை வீரர்கள்
x

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகைக்காக நள்ளிரவில் 100-க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகைக்காக நள்ளிரவில் 100-க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம் கோவில்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மை தலமாக விளங்குவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கிறார்கள். திருச்சிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளும் கட்டாயம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பார்த்துவிட்டு தான் செல்வார்கள். ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதுண்டு.

இந்தநிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவ்வப்போது பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் தேசிய பாதுகாப்பு படை மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு படை சார்பில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மேஜர் திவாகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு கமாண்டோ படை வீரர்கள் கருப்பு உடையுடன் ஸ்ரீரங்கம் பகுதிக்கு வந்தனர்.

பயங்கரவாத தடுப்பு ஒத்திகை

அவர்கள் கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளையும் அடைத்து பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். கோவிலுக்குள் இருக்கும் பக்தர்களை திடீரென பயங்கரவாதிகள் பிடித்து கொண்டால் அவர்களை எப்படி மீட்பது?. பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தவுடன் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் எந்தெந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வியூகங்களை வகுத்து தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

கோவிலுக்குள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த தகவல் கிடைத்தவுடன் முதலில் கிழக்கு வாசல் வழியாக தமிழக கமாண்டோ படை வீரர்கள் 42 பேர் கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் ரப்பர் குண்டுகளால் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இவர்களால் பயங்கரவாதிகளை முழுமையாக தீர்த்து கட்ட முடியவில்லை. இதனால் தமிழக கமாண்டோ படை வீரர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர்.

துப்பாக்கி சத்தங்கள்

இதனை தொடர்ந்து வடக்குவாசல் வழியாக தேசிய பாதுகாப்பு படையினர் 142 பேர் கோவிலுக்குள் புகுந்து நாலாபுறமும் சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை ரப்பர் குண்டுகளால் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை முற்றிலுமாக கொன்றுவிட்டு பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்த பக்தர்களை மீட்டு வருவது போன்ற ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில் `நைட் விஷன்' கேமராக்கள், டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட்டன. இந்த ஒத்திகை காரணமாக பொதுமக்களின் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், சைரன் ஒலியுடன் கூடிய வாகனங்கள், துப்பாக்கி சத்தங்கள், குண்டு வெடிக்கும் சத்தங்கள் அனைத்தும் தத்ரூபமாக இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு அது பாதுகாப்பு ஒத்திகை தான் என்று தெரியவந்தது. அதன்பிறகே அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

கமாண்டோ படை வீரர்கள் குவிந்தனர்

ஒத்திகை நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, துணை கமிஷனர் அன்பு மற்றும் போலீசார் பார்வையிட்டனர். பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இரவு 10.30 மணி முதல் நேற்று அதிகாலை 2.30 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியால் அங்கு நள்ளிரவில் 100-க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தலைமையில் கமாண்டோ படைவீரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


Next Story