கடையநல்லூரில் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் தொடக்கம்
கடையநல்லூரில் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் தொடங்கப்பட்டு உள்ளது.
கடையநல்லூர்:
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு, மத்திய அரசின் என்.ஏ.எப்.ஈ.டி. நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு இலக்கு நிர்ணயித்து அரசாணை பெறப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் அதன் எல்கைக்கு உட்பட்ட தென்னை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்படி கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.108.60 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தற்போது 7 விவசாயிகளிடம் இருந்து 76 குவிண்டால் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுப்பையா, நெல்லை விற்பனைக்குழு செயலாளர் எழில், கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் உமாதேவி, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மாரி, உதவி வேளாண் அலுவலர் கருப்பையா, முருகேசன், தென்னக நதிகள் இணைப்பு மாநில செயலாளர் ஜாஹிர்உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.