பாலாற்றங்கரையில் 347 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடக்கம்
மேல்விஷாரத்தில் பாலாற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 347 வீடுகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேல்விஷாரத்தில் பாலாற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 347 வீடுகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு வீடுகள்
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சாதிக்பாட்சா நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகள் உள்ளது. இங்கு பாலாற்றங்கரையோரம் ஆக்கிரமித்து சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக 347 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதிகளில் வெள்ளம் புகுந்து அங்கு குடியிருந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இந்தநிலையில் இப்பகுதிகளில் பாலாற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீடுகளை அகற்றும்படி கடந்த மார்ச் மாதம் 11-ந்் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வசித்து வரும் பொதுமக்களுக்கு வீடுகளை காலி செய்யும்படி பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது.
அவர்களுக்கு மாற்று இடம் வாலாஜா தாலுகா ஆற்காடு அடுத்த கூராம்பாடி பகுதியில் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை யார் யாருக்கு எவ்வளவு இடம் என அளந்து கல்நட்டு ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. அப்போது அங்கு வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டனர்.
அகற்றும்பணி தொடக்கம்
அந்த கால அவகாசம் வரும் 28-ந் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி தலைமையில் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், நீர் வளத் துறையினர், மின்சாரத் துறையினர் ஆகியோர் மின் இணைப்பைத் துண்டித்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வீடு கட்டி வசித்து வரும் நபர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கால அவகாசம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அதற்குள் ஏன் வீடுகளை இடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். ஒரு சிலர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அவர்களை கீழ்விஷாரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் விடுவித்தனர். இதனை தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.