வணிக வரித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
பணிச்சுமை ஏற்படுத்துவதை கைவிடக்கோரி வணிக வரித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
நாகர்கோவில்,
முதுநிலை நிர்ணயம் தொடர்பான கோா்ட்டு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். விஞ்ஞான பூர்வமற்ற இலக்கு நிர்ணயித்து அலுவலர்களுக்கு செயற்கையாக பணிச்சுமை ஏற்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிக வரித்துறை பணியாளர் சங்கம் சார்பில் குமரி மாவட்டத்தில் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.
அதன்படி நாகர்கோவில், காட்டாத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வரித்துறை அலுவலகங்களில் பணியாற்றி வரும் 86 ஊழியர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து சென்றனர். இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'போராட்டம் தொடர்ந்து நாளை (அதாவது இன்று) நடைபெறும். கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும்' என்றனர். ஊழியர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் அலுவலகங்கள் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நேற்று அலுவலக பணிகள் எதுவும் நடைபெறவில்லை.