வளர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சித்துறை ஆணையர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சித்துறை ஆணையர் தாரேஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம், பிரதமர் குடியிருப்பு கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் என்னென்ன வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்று விளக்கமளித்தனர்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வந்தனா கார்க், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தாகரேசுபம் தியாண்டேராவ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
மறுசுழற்சி மையம்
முன்னதாக ஆத்தூர் தாலுகா என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மூலம் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி மையத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் முறை, கழிவுகளை தரம் பிரிக்கும் முறை, கழிவுகளை தனியாக அரைத்து அதனை சாலை அமைப்பு பணிக்கு பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் இந்த பணிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் என்.பஞ்சம்பட்டியில் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கல்வாழை வளர்ப்பு மூலம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் ஆனந்த ஓடை பகுதியை ஊராட்சித்துறை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலை பணிகள்
அதையடுத்து தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அம்பாத்துறை முதல் செம்பட்டி வரை உள்ள சாலையில் பச்சைமலையான்கோட்டை பிரிவு முதல் பச்சையான்கோட்டை வரை ரூ.49 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமாக உள்ளதா? அரசு விதிமுறைகளை பின்பற்றி சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறதா? என்று ஊராட்சித்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற ஊராட்சித்துறை ஆணையர் அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.