ஊரக வளர்ச்சி துறையின் திட்ட பணிகளை ஆணையர் ஆய்வு


ஊரக வளர்ச்சி துறையின் திட்ட பணிகளை ஆணையர் ஆய்வு
x

ஊரக வளர்ச்சி துறையின் திட்ட பணிகளை ஆணையர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையர் டாக்டர் தரேஸ் அகமது தலைமை தாங்கினார். பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தரேஸ் அகமது பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சி ஒன்றியம் வாரியாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை கட்டமைப்புகள், 14, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் அடிப்படை திட்டங்களை நிரைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை, நிலுவைக்கான காரணம் போன்றவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையர் தரேஷ் அகமது ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் மருதையாற்றின் குறுக்கே ரூ.613.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப்பாலத்தையும், திம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினையும், கொளத்தூர் பகுதியில் அருணகிரிமங்கலம் முதல் கொளத்தூர் வரை உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.126.28 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளையும், காரை கிராமத்தில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.5.80 லட்சம் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட குளத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.342.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டிடத்தினையும், நாரணமங்கலம் கிராமத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து நர்சரி அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்கள் லலிதா (பெரம்பலூர்), ஈஸ்வரன் (அரியலூர்), ஊரக வளர்ச்சி துறை பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story