போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொது மக்கள்
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொது மக்கள். நிரந்தர தீர்வுகாண கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம் நகரில் பழனிபேட்டை, சோளிங்கர் ரோடு, பஜார் பகுதி, பழைய பஸ் நிலையம் முதல் சுவால்பேட்டை வரையிலும், திருத்தணி ரோடு ஜோதி நகர் வரையிலும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று திரும்பும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லவும் மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவமனை, இதர பணிகளுக்காகவும் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். மேலும், ஒரு சில கடைகள் சாலைகள் வரை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது.
இதனிடையே சோளிங்கர் ரோடு வங்கிகள் உள்ள பகுதிகளிலும் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ் சுவால்பேட்டை தாசில்தார் தெரு திருப்பத்தில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்ல முயலும் போதும் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்ல மாணவர்களும், முதியோர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளர்.