தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 70), விவசாயி. இவர் தனது நிலத்தின் கூட்டுப்பட்டாவினை தனிப்பட்டாவாக மாற்றக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 17 முறை கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மனமுடைந்த ராம கிருஷ்ணன், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பினாயில் பாட்டிலுடன் வந்தார். அவர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அந்த பினாயில் பாட்டிலை திறந்து குடிக்க முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி பினாயில் பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அவரை கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். அப்போது அவர், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதன் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கலெக்டர் அலுவலகத்தில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.