ஊழியரிடம் தகராறு செய்த வாலிபர்களால் பரபரப்பு
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியரிடம் தகராறு செய்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கூடலூர்
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியரிடம் தகராறு செய்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிகிச்சை அளிப்பதை வீடியோ எடுத்தனர்
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாக்கமூலா பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்து காயம் அடைந்தார். அவரை நண்பர்கள் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து இரவு நேர பணியில் இருந்த மருத்துவ ஊழியர்கள், அந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தனர். இதை அவரது நண்பர்கள் 2 பேர் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவ ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பரபரப்பு
அப்போது மருத்துவ ஊழியர் முகமது ரிஸ்வான் மற்றும் வீடியோ எடுத்த 2 வாலிபர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். எனினும் மருத்துவ ஊழியருக்கும், வாலிபர்களுக்கும் மோதல் தொடர்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ஆஸ்பத்திரி ஊழியர் முகமது ரிஸ்வான், கூடலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.