சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 301 பேர் கைது
சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 301 பேரை போலீசாா் கைது செய்தனர்.
சிதம்பரம்,
சாலை மறியல்
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட குழு சித்ரா, வட்டக்குழு குமாரி, நிர்வாகிகள் ரகுமான், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கட்டுப்பாட்டு குழு மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் வி.எம். சேகர், குலோப் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கஞ்சி தொட்டி முனையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வடக்கு வீதி தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 51 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
நெல்லிக்குப்பம்
இதேபோல் மேல்பட்டாம்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவகுமார், ஆறுமுகம், நிர்வாகிகள் பாலச்சந்தர், ஜெகதீசன், கலை ராஜா, பிரபாவதி, புவனேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 92 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பண்ருட்டி
பண்ருட்டி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட நகர கிளை செயலாளர் ரமேஷ், மாவட்ட குழு குணசேகரன், கட்டுமான தொழிற்சங்க தலைவர் முருகன், நகர பொருளாளர் முருகன், நடைபாதை வியாபார சங்க தலைவர் ரகுபதி, ராமச்சந்திரன், கோகுல், அருள்தாஸ், ஜெகதீஷ், நடராஜ் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
புதுப்பேட்டை
புதுப்பேட்டை அருகே அங்குசெட்டிப் பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகர் தலைமையில், கடலூர் மாவட்ட செயலாளர் துரை, ஒன்றிய துணை செயலாளர்கள் கணேசன், சம்பத்குமார், பொருளாளர் பாபு ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 60 பேரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.