இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், திருமானூர் ஒன்றிய செயலாளர் கனகராஜ், கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும், வேலையில்லா திண்டாட்டம், மின் உற்பத்தி வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்த்து மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு அரசு வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தியதை மறுபரிசீலனை செய்து ரத்து வேண்டும், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் அவர்கள் ஊர்வலமாக ெசன்று பஸ் நிலைய சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் தா.பழூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் உலகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து 29 பேர் தா.பழூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் மறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து 29 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story