யானையோடு எலியை ஒப்பிடுவதா?ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை இணைக்க ரகசிய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை:முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேட்டி


யானையோடு எலியை ஒப்பிடுவதா?ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை இணைக்க ரகசிய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை:முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தேனி

திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் கூடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமார் இல்ல திருமண விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தேனி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

வரவேற்பு முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர்.

தேனி அருகே மதுராபுரியில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டபோது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி மாவட்டத்துக்கு வருகை தரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட மக்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திப்போம். திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு வெற்றி கிடைத்ததுபோல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி கிடைக்கும்.

பேச்சுவார்த்தை இல்லை

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை அ.தி.மு.க.வில் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இதுதொடர்பான ரகசிய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. எங்களிடம் ரகசியம் எதுவும் கிடையாது. அ.தி.மு.க.வின் 99.5 சதவீதம் பேர் எங்களிடம் தான் இருக்கிறார்கள். கட்சி என்றால் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால் பா.ஜ.க. போட்டியிட்டால் விட்டுக் கொடுப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியது விந்தையாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக சொல்லி இருக்கிறார். சின்னமே எங்களிடம் தான் இருக்கிறது.

அவமானமாக கருதுகிறேன்

எங்களோடு ஓ.பன்னீர்செல்வத்தை ஒப்பிடுவதை அவமானமாக கருதுகிறேன். யானையோடு எலியை ஒப்பிடாதீர்கள். தி.மு.க. அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்து பேசி உள்ளாரா? ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறாரா? மக்களை மட்டும் நம்பி இருக்கும் கட்சி அ.தி.மு.க. இடைத்தேர்தலில் தி.மு.க. ஆட்சியின் அலங்கோலம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுவதை எடுத்துக் கூறி பிரசாரம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், அமைப்பு செயலாளர் ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story