மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.9 லட்சம் இழப்பீடு


மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.9 லட்சம் இழப்பீடு
x

மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வட்டியுடன் வழங்க மின்வாரியத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை
திருச்சியை சேர்ந்த லட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர் பழனிசாமி. விவசாயி. கடந்த 2016-ம் ஆண்டு எங்கள் விவசாய நிலத்திற்கு நடந்து சென்றபோது அங்கு மின்கம்பத்தில் கட்டப்பட்டு இருந்த கேபிள் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது. இதில் எனது கணவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் மின்சாரம் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. எனது கணவரின் வருமானம்தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்தது.

எனது கணவர் இறப்புக்கு பிறகு நானும், எனது 2 மகன்களும் போதிய வருமானமின்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே என் கணவர் இறப்புக்்கு உரிய இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் இறந்த விவகாரத்தில், மின்கம்பத்தில் சட்டவிரோதமாக கேபிள் டி.வி. ஒயர் இணைக்கப்பட்டு இருந்ததை அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவேளை மின்கம்பத்தில் இருந்து கேபிள் வயரை அகற்றியிருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது. எனவேதான் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் கடமைப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில் மனுதாரருக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.9 லட்சத்து 7 ஆயிரத்து 104-ஐ 11.6.2016 அன்று முதல் தற்போது வரையிலான காலத்திற்கு கணக்கிட்டு, 6 சதவீத வட்டியுடன் 12 வாரத்தில் மின்வாரியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.



Next Story