மின்சாரம் தாக்கி பலியான ஒப்பந்த பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.7½ லட்சம் நிவாரணம்
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி பலியான ஒப்பந்த பணியாளார் குடும்பத்தினருக்கு ரூ.7½ லட்சம் நிவாரணத்தை பன்னீர் செல்வம்,எம்.எல்.ஏ. வழங்கினார்.
சீர்காழி:
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி பலியான ஒப்பந்த பணியாளார் குடும்பத்தினருக்கு ரூ.7½ லட்சம் நிவாரணத்தை பன்னீர் செல்வம்,எம்.எல்.ஏ. வழங்கினார்.
மின்சாரம் தாக்கி இறந்தார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருகாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழாநல்லூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ஆனந்தராஜ் (வயது 22 ). இவர் தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6-ந் தேதி பழைய சுனாமி குடியிருப்பு அருகில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியில்ஈடுபட்டபோது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி இறந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உரிய நிவாரணம் வழங்க கோரி கடந்த 7-ந் தேதி சீர்காழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
ரூ.7½ லட்சம் நிவாரணம்
கூட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்ததனர். அதன்பேரில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில் நேற்று சீர்காழி சட்டமன்ற அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு மற்றும் ஒப்பந்தகாரர் சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பாதிக்கப்பட்ட ஆனந்தராஜ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மின்சார வாரிய துறை சார்பில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் ஒப்பந்தக்காரர் சார்பில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார். அப்பொழுது தமிழ்நாடு மின்சார வாரிய மாவட்ட மேற்பார்வையாளர் சசிதரன், செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், ஒப்பந்தக்காரர் பார்த்திபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன், தி.மு.க. நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.