ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
வடகாடு பகுதியில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்பயிர்கள் சேதம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு இறுதியில் தாளடி சம்பா நெல் சாகுபடி பணிகளில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இப்பகுதிகளில் பருவம் தவறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் அறுவடை பணிகள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும், தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இந்தநிலையில், நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திடீரென பெய்த கனமழையால் நெல் அறுவடை வயல்களில் தேங்கிய மழை நீரை என்ன செய்வது என தெரியாமல் ஒரு சில விவசாயிகள் பொக்லைன் எந்திர உதவியுடன் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகி போனதால் விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். விவசாயிகளின் நிலையை உணர்ந்து உரிய கணக்கீடு செய்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.