பாதித்த குறுவை நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


பாதித்த குறுவை நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் பாதித்த குறுவை நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் பாதித்த குறுவை நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

முளைப்பு திறன் இல்லாததால்...

நீடாமங்கலம் வட்டத்தில் தனியார் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு அரசின் சான்று பெற்ற விதை நெல் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இத்தகைய தனியார் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்ட அரசு சான்று பெற்ற ஏ.எஸ்.டி 16 நெல் ரகம் என்ற விதை நெல்லை ஏராளமான விவசாயிகள் வாங்கி சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது அறுவடை பணிகள் தொடங்கி உள்ள நிலையில் பயிரிடப்பட்ட ஏ.எஸ்.டி 16 நெல் ரகம் வயல்களில் 20 சதவீதம் பகுதி நெற்கதிர் வந்த நிலையில், மீதம் உள்ள 80 சதவீதம் பகுதி விதை நெல் முளைப்பு திறன் இல்லாததால் பயிர் வீணாகியுள்ளது. பூவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள குறுவை விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

போலி கலப்பட விதைநெல்லால் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டேவிட், ஒன்றிய தலைவர் பாரதி மோகன் தலைமையில் மாநில செயலாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கினால், அதன் மூலம் அடுத்த கட்ட சம்பா, தாளடி பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள பேருதவியாக இருக்கும் என்றனர்.


Next Story