பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்


பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்
x

மாவட்டத்தில் சூறைக்காற்றில் வாழை, நெற்பயிர்கள் சேதமானதை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார்.

புதுக்கோட்டை

சேதம்

ஆலங்குடி தாலுகாவில் நேற்று முன்தினம் ஆலங்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அப்பகுதிகளில் 1,600 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெற்பயிர்கள், சோளப்பயிர்கள் உள்ளிட்டவைகள் சாய்ந்து சேதமடைந்தன.

இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர். மேலும் இதுகுறித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில், ஆலங்குடியில், புள்ளான்விடுதி, வடகாடு, வாணக்கன்காடு, வாண்டான்விடுதி, கருக்காக்குறிச்சி, பெரியவாடி, சூரக்காடு, வெண்ணாவல்குடி, குப்பகுடி, மாங்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் சென்றனர். பின்னர் அங்கு மழையினால் சேதமான வாழைகள், சோளப்பயிர்கள், தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட வயல்களை முறையான கணக்கீடு செய்யும் பணியை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கும் என்றும், நிச்சயம் தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் எனவும் கூறினார். ஆய்வின்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தாசில்தார், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இழப்பீடு வழங்கப்படும்

இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை, சோளம், நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பெற்று தரப்படும். வாழை விவசாயிகள் வருங்காலத்தில் முறையான காப்பீடு செய்ய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டாயம் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்கி வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story