19 மையங்களில் குரூப்-1 போட்டித்தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 19 மையங்களில் குரூப்-1 போட்டித்தேர்வை 5,512 பேர் எழுதுகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 19 மையங்களில் குரூப்-1 போட்டித்தேர்வை 5,512 பேர் எழுதுகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 பணிக்கு போட்டித்தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வுக்கான, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு மாவட்டத்தில் 19 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை 5,512 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க 19 முதன்மை கண்காணிப்பாளர்களும், 2 பறக்கும் படையும், 6 நடமாடும் அலகு, 19 ஆய்வு அலுவலர்கள், 20 வீடியோ கிராபர்கள், 6 ஆயுதம் ஏந்திய போலீசார், 19 தேர்வு கூட காவலர்கள் என மொத்தம் 91 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் வசதி
தாசில்தார்கள் மூலம் தேர்வு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தளவாடங்கள் இல்லை எனும் பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழித்தட வரைபடமும், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சார்பில் 19 தேர்வு கூடங்களுக்கு தேர்வாளர்கள் செல்ல ஏதுவாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மின்சார வாரியம் சார்பாக தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கவும், தீயணைப்புத்துறை சார்பாக பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இது தவிர நகராட்சி ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மூலம் தேர்வு நாளன்று குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவக்குழு
மேலும் நலப்பணிகள் இணை இயக்குனர் சார்பாக கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் நடமாடும் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலர்கள் அனைவரும் முழு சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர் சதீஸ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, போக்குவரத்து துறை, கல்வித்துறை, தீயணைப்புத்துறை, பேரூராட்சிகள் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கருவூலத்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.