டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை குறிப்பிட்ட மாதத்தில் நடத்தவேண்டும் - திருமாவளவன்


டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை குறிப்பிட்ட மாதத்தில் நடத்தவேண்டும் - திருமாவளவன்
x

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, 2, 4 போட்டித் தேர்வுகளை குறிப்பிட்ட மாதத்தில் நடத்தவேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை அண்மையில் வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டு திட்டத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளும் துறை சார்ந்த தேர்வுகளாக அமைந்துள்ளன.

மேலும் பல இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் GR-IV (குரூப்-4) தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறுமென்கிற சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டி தேர்வினை எழுத தயாரான சூழலில், சமீபத்தில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டுத்திட்டம் போட்டித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் நிலையிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும். இதன் காரணமாக வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

தேர்வு முறைகளில் தேர்வாணையம் கொண்டு வரும் சீர்திருத்தங்களை வரவேற்கும் அதே வேளையில், தொடர்ந்து தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கேள்விகள் முறையில் உருவாக்கிவரும் மாற்றம் தேர்வர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக ஓர் அயர்ச்சியையும், போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில் ஒரு குழப்பநிலையையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தேர்வாணையம் போட்டித்தேர்வர்களின் மேற்கண்ட சிக்கல்களை கவனத்தில்கொண்டு நிலையான பாடத்திட்டம் மற்றும் கேள்விகேட்கும் முறை ஆகியவற்றைச் சரியாக கையாள வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.

மேலும், ஆளுநர் உரையில் அரசுப்பணிகளில் 10402 பின்னடைவு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை உறுதி அளிக்கப்பட்ட நிலையில், துறைவாரியான காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் பெறப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் தெரியவருகிறது.

ஏற்கனேவே நிரப்பப்படாத பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களுக்கான அறிவிப்பும் இந்த ஆண்டுத்திட்டதில் இல்லாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

அத்துடன் UPSC (யுபிஎஸ்சி) மற்றும் TNPSC Gr(1) முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின தேர்வர்களுக்கு அரசு வழங்கும் ரூ.50000 நிதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

எனவே, தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமெனவும், GR- (1),(II) & (iv) (குரூப் 1, 2, 4) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

மேலும், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கான நிரப்பபடாத பணியிடங்களை நிரப்புவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Next Story