ராமநாதபுரம் நகரசபை கூட்டத்தில் தலைவர் பரபரப்பு புகார்
ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை காணவில்லை என்று நகரசபை கூட்டத்தில் தலைவர் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை காணவில்லை என்று நகரசபை கூட்டத்தில் தலைவர் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
நகரசபை கூட்டம்
ராமநாதபுரம் நகரசபை கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் பிரவீன்தங்கம் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் ஆணையாளர் எங்கே அவர் இல்லாமல் எப்படி கூட்டம் நடத்துவது என்று கேட்டனர்.
தலைவர்: அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை காணவில்லை. என்னிடம் எதுவும் சொல்லவில்லை. கூட்டம் நடப்பது தெரிந்தும் சொல்லாமல் சென்றுவிட்டார். இதுகுறித்து மண்டல இயக்குனருக்கு தெரிவித்தபோது பொறியாளரை வைத்து கூட்டம் நடத்துமாறு கூறியதால் அதன்படி நடக்கிறது.
குமார்: நகராட்சி நிர்வாகத்தை மதிக்காமல் இதுபோன்று செயல்படும் ஆணையாளரை கண்டித்து தீர்மானம் போடுங்கள். உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவரை மாற்ற சொல்லுங்கள். நகரசபை அலுவலகத்தில் பணியாளர்களை அடிமை போல நடத்துவதாக குற்றச்சாட்டு வருகிறது. வேலை என்ற முறையில் இரவு 11 மணி வரை இருக்க வைத்து ஊழியர்களை பழிவாங்கி வருகிறார்.
ராஜாராம்பாண்டியன்: கவுன்சிலர்களுக்கு கூட்டம் குறித்து நேற்றுதான் தகவல் வந்தது. கூட்ட பொருள் படித்து பார்க்க கூட நேரமில்லை. விதிகளின்படி கூட்டம் நடத்துவதை உறுதி செய்யுங்கள்.
புகார் கடிதம்
தலைவர்: அனைத்து கவுன்சிலர்களும் புகார் கடிதம் எழுதி கொடுத்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். நகரசபை கூட்டத்தில் மொத்தம் 45 தீர்மானங்கள் எழுதி கொடுத்து அவரின் அனுமதி பெற்று வைக்க தயாரித்த போது அதில் 26 தீர்மானங்களில் மட்டும் கையெழுத்திட்டுவிட்டு மீதம் உள்ள 19 தீர்மானங்களில் கையெழுத்திடாமல் சொல்லாமல் சென்றுவிட்டார். நகரின் தேவைக்கு எந்த திட்டம் முக்கியமோ அதனை கையெழுத்திடாமல் இதுபோன்று சென்றது கண்டிக்கத்தக்கது.
இதனை கேட்ட அனைத்து கவுன்சிலர்களும் இதுபோன்ற ஆணையாளரை வைத்துக்கொண்டு மக்கள் பணி எவ்வாறு செய்ய முடியும் என்று ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர்.
தலைவர்: உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பொறியாளர் மூலம் ஓரிருநாளில் அவசர கூட்டம் நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றலாம்.
மராமத்து
கமலக்கண்ணன் ஸ்டாலின்: எனது வார்டில் சாலைகள் மோசமாக உள்ளது. மராமத்து செய்தாவது தாருங்கள். 33 வார்டில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தி.மு.க. வார்டு அது.
தலைவர்: கவுன்சிலர் கூட்டத்தில் பேச வேண்டும் என்பதற்காக ஏதாவது பேசக்கூடாது. அதிகவாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும் நான் 33 வார்டுக்கும்தான் தலைவர். அனைவருக்கும் பகிர்ந்துதான் பணிகளை ஒதுக்க முடியும். நிதி வந்ததும் உங்களின் குறைகள் சரிசெய்யப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.