கால் அழுகிய நோயாளியை வெளியே போட்டு சென்றதாக புகார்
கால் அழுகிய நோயாளியை வெளியே போட்டு சென்றதாக புகார் செய்யப்பட்டது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் பிணவறை அருகே, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் காலில் பெரிய புண் ஏற்பட்டு, அழுகிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஈ, எறும்பு மொய்த்த நிலையில் ரோட்டில் வீசப்பட்டு கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ரெட்கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்தன் பேரில் விரைந்து வந்த ரெட்கிராஸ் அமைப்பினர் அந்த நபரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு சர்க்கரை நோய் காரணமாக, காலில் புண் ஏற்பட்டு கால் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் அவரை ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் வீல் சேரில் தள்ளி வந்து மீண்டும் பிணவறை அருகே தள்ளிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டபோது, அந்த நோயாளி கடந்த ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்தார். அவ்வப்போது அவராகவே ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி விடுகிறார். மேலும் தன்னை வெளியே விட்டு விடுமாறு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் அவர்கள் அவரை வெளியே விட்டனர். தற்போது மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற ஆதரவற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின்னர் அவர்களை பராமரிப்பதற்காக இரு தொண்டு நிறுவனங்களுடன், அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கப்பலூரில் அரசு மருத்துவமனையும் தனியாக ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்தி வருகிறது. கடந்த 9 மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆதரவற்றோர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.