பட்டா நிலங்களில் சாலை அமைத்ததாக புகார்: அரசு நிதியை வீணடித்ததாக முன்னாள் நீதிபதி தொடர்ந்த வழக்கு - ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பட்டா நிலங்களில் சாலைகளை அமைத்து, அரசு நிதி ரூ.12 லட்சத்தை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பட்டா நிலங்களில் சாலைகளை அமைத்து, அரசு நிதி ரூ.12 லட்சத்தை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பட்டா நிலங்களில் சாலை
சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஏ.செல்வம். இவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூலாங்குறிச்சி கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான சொத்துகளில் பூலாங்குறிச்சி ஊராட்சிக்கு எந்த உரிமையும் இல்லை. சிலரின் சுய லாபத்திற்காக ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் செலவு செய்து பேவர் பிளாக் சாலை அமைத்து உள்ளனர். அதேபோல அங்குள்ள கருப்பர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.1 லட்சம் செலவில் சாலை அமைத்து உள்ளனர். இங்கு குப்பைகளை கொட்டுகின்றனர். பூலாங்குறிச்சி ஊராட்சிக்கு எந்த உரிமையும் இல்லாத நிலத்தில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் செலவில் கல்மேடை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு நிதி வீணடிப்பு
சிலர் தங்களது சுய லாபத்திற்காக அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.4,25,000 செலவில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அரசின் நிதி, ரூ.12 லட்சத்து 72 ஆயிரம் வீணடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டா இடத்திலோ, கோவில் நிலத்திலோ பொதுமக்களின் கோரிக்கைக்காக சாலை அமைக்க முடியாது. எனவே பொதுமக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்திய சிவகங்கை மாவட்ட கலெக்டர், திருப்பத்தூர் திட்ட மேம்பாட்டு அலுவலர், பூலாங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைநீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, பூலாங்குறிச்சியில் மனுதாரர் தெரிவிக்கும் இந்த பணிகளை பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் நிறைவேற்றி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது தெரிவித்து உள்ளனர். தனிநபர், பட்டா நிலங்களில் எந்த அனுமதியின்றி ஊராட்சி பணிகளை நிறைவேற்ற இயலாது. எனவே சட்டத்துக்கு முரணான நடவடிக்கையில் ஈடுபட்டது ஏன்? என விசாரிக்க வேண்டும் என்றார்.
பதில் அளிக்க உத்தரவு
விசாரணை முடிவில், இந்த வழக்கு தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதம் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.