டெண்டர் விடாமல் தாமதப்படுத்துவதாக அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார்
டெண்டர் விடாமல் தாமதப்படுத்துவதாக அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் நேரில் விசாரணை நடத்தினார்.
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர், கரூர் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அரவக்குறிச்சி அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் புகார் மனு அனுப்பி இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் மன்ற அங்கீகாரம் இல்லாமல் பணிகளை செய்துவிட்டு பிறகு அங்கீகாரம் கோருவதாகவும், ஒன்றிய பொது நிதியை பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தாமல் பிற பணிகளுக்கு பயன்படுத்துவது, 15-வது நிதி குழு மானிய நிதியை பல மாதங்களாக கிடப்பில் போடுவது, மாவட்ட ஊராட்சி குழு நிதியை நிர்வாக அனுமதி வழங்கிய பிறகும் வருட கணக்கில் டெண்டர் விடாமல் தாமதப்படுத்துகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனுதாரர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் நேற்று விசாரணை நடத்தினார்.