மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக ஆசிரியர் மீது புகார்
குடியாத்தம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.
மாணவிகளிடம் சில்மிஷம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1,625 மாணவிகள் படித்து வருகின்றனர். 40 ஆசிரியைகள், 7 ஆசிரியர்கள் என 47 பேர் பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியையாக ஜி.அகிலா என்பவர் உள்ளார்.
இந்தப் பள்ளியில் லத்தேரியை அடுத்த செஞ்சி பகுதியைச் சேர்ந்த கே.ராமன் (வயது 44) என்பவர் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் பல ஆண்டுகளாக சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர்.
முற்றுகை
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு மாணவி, ஆசிரியர் ராமன் தன்னிடம் சில்மிஷம் செய்ய முயன்றதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் ஆசிரியர் ராமனிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியை அகிலா தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் மாணவியிடம், ஆசிரியர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் பரவியது. இதனால் நேற்று 300-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியை ஜி.அகிலா, மாவட்ட கல்வி அலுவலர் எம்.அங்குலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் எம்.எஸ்.அமர்நாத், ஜி.எஸ்.அரசு மற்றும் பிரமுகர்கள் பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தொடர்ந்து பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ராமன் சில்மிஷம் செய்ததாக ஏராளமான மாணவிகள் குற்றம் சாட்டினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதியம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மாலை வரை போராட்டம் நடைபெற்றதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், ஆசிரியர் ராமன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். ஆசிரியர் ராமன் மீது கல்வித் துறை சார்பில் பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பள்ளியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும், பள்ளியில் உள்ள ஆண் ஆசிரியர்களை மாற்றி விட்டு பெண் ஆசிரியைகள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பரபரப்பு
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பி.வேதநாயகம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் டி.எம்.சஞ்ஜித் ஆகியோர் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் பெற்று காவல்துறை மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
மாணவிகளின் பெற்றோர் சார்பில் புகார் தரப்பட்டு ஆசிரியர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மணிநேரம் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.