தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த தொப்பப்பட்டி கிராமத்தில் கடைவீதிக்கு பின்புறம் உள்ள தேவேந்திரர் தெருவில் உள்ள மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சம்பிகள் தெரிந்தபடி இடிந்து விழும் நிலையில் காட்சி அளித்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-ரமேஷ், தொப்பப்பட்டி, நாமக்கல்.

===

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டியில் இருந்து பாரூர் செல்லும் வழியில் காளியம்மன் கோவில் உள்ளது. அங்கிருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதை வழியாக இருக்கும் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் விவசாய நிலத்தில் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள் அனைத்தும் ஒருபுறம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வேகமாக காற்று வீசினால் அந்த மின்கம்பங்கள் சாய்ந்து அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சரிசெய்ய வேண்டும்.

-உதயகுமார், அரசம்பட்டி, கிருஷ்ணகிரி.

===

போக்குவரத்து செரிசல்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தக்காளி மார்க்கெட், பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, மந்தைவெளி ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பள்ளி, கல்லூரி பஸ்கள் மற்றும் பயணிகள் பஸ்கள் அனைத்தும் நகர் பகுதிக்குள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காலை, மாலை பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பஸ்கள் எம்.ஜி.ரோடு வழியாக வெளியேற அப்பாதைய ஒரு வழி பாதையாக மாற்றியமைக்கவும், போக்குவரத்தை முறைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபால், பாலக்கோடு, தர்மபுரி.

====

மது அருந்தும் இடமாக மாறிய பூங்கா

கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் டான்சி வளாகம் அருகில் நகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு பொதுமக்கள் பலரும் வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவில் பகல் நேரத்தில் சிலர் மது பாட்டில்களுடன் வந்து உள்ளேயே மது குடிக்கிறார்கள். மேலும் மது பாட்டில்களை உள்ளேயே போட்டு செல்கிறார்கள். மேலும் ஒரு சில ஆண்-பெண் சிலரும் பூங்காவிற்குள் வந்து அத்துமீறுகிறார்கள். எனவே பூங்காவிற்குள் அவ்வப்போது காவல் துறையினர் வந்து கண்காணிக்க வேண்டும்.

-குமார், ஜக்கப்பன் நகர், கிருஷ்ணகிரி.

=====

மேற்கூரை அமைக்கப்படுமா?

சேலம் மாநகரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க செல்வோர் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ரேஷன் கடையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து அந்த பகுதியில் பொருட்கள் வாங்க காத்திருக்கும் மக்களுக்காக மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.

=====

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்துள்ள ஆடையூர், பக்கநாடு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு வேலைகளுக்கு அதிகமானோர் சென்று வருகின்றனர். அதனால் இந்த பகுதிக்கு பஸ் போக்குவரத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய முடியவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. எனவே அந்த பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பஸ் போக்குவரத்து இல்லாமல் தொடர்ந்து அதிகஅளவில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கலையரசன், ஜலகண்டாபுரம், சேலம்.

===

பெயர் பலகைகள் சரிெசய்யப்படுமா?

சேலம் மாநகத்தில் உள்ள தெருக்களின் முன்பு வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் ஆங்காங்கே பெயர்ந்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றனர். சாலை பராமரிப்பு, சாக்கடை கால்வாய் தூர்வாருதல் ஆகிய பணிகளுக்கு அந்த பெயர் பலகைகள் சேதபடுத்தப்பட்டுள்ளன. இதனால் சரியான முகவரி தெரியாமல் தபால்காரர், புதிதாக அந்த பகுதிக்கு வருபவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள பெயர் பலகைகளை சரிசெய்து வைக்க வேண்டும்.

-சுப்ரமணி, குகை, சேலம்.


Next Story