புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் வருமா?
நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் சுத்தமல்லி கிராம பஞ்சாயத்து திருவள்ளுவர் நகரில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பெண்கள் குடிநீருக்காக குடங்களுடன் அங்கும், இங்கும் அலைய வேண்டி உள்ளது. எனவே, அப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சந்திரசேகர், திருவள்ளுவர்நகர்.
ஏ.டி.எம். வசதி தேவை
திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால், இங்கு ஏ.டி.எம். வசதி இல்லை. இதனால் அவசரத்துக்கு பணம் எடுக்க வேண்டுமானால் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திசையன்விளைக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே, ஆத்தங்கரை பள்ளிவாசலில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- அந்தோணி பிச்சை, தோப்புவிளை.
பஸ் வசதி வேண்டும்
கல்லிடைக்குறிச்சி பகுதியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வேலைக்காக நெல்லைக்கு செல்கின்றனர். காலை 6 மணி முதல் சுமார் ½ மணி நேரம் வரை பஸ்கள் வருவது இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக பஸ்களை இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவர்.
- முத்துகுமார், கல்லிடைக்குறிச்சி.
பராமரிப்பு இல்லாத மருத்துவமனை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அரசு மருத்துவமனை போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. நோயாளிகள் படுக்கும் படுக்கைகள் கிழிந்தும், சுதாதாரம் அற்ற நிலையிலும் காட்சி அளிக்கிறது. அறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. கழிப்பறையில் கதவு சேதம் அடைந்து உள்ளது. எனவே, மருத்துவமனையை உரிய முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுககொள்கிறேன்.
- ராஜேஷ், ஆய்க்குடி.
தெருவில் ஓடும் கழிவுநீர்
ஆலங்குளம் யூனியன் குத்தபாஞ்சான் தெற்கு தெருவில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. வாறுகால் வசதியும் சரிவர இல்லாததால் தெருவில் கழிவுநீர் ஓடுகிறது. எனவே, புதிய சாலை அமைத்து வாறுகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சுப்புராஜ், குத்தப்பாஞ்சான்.
வாறுகாலை தூர்வார வேண்டும்
புளியங்குடி சங்கரனார் கோவில் தெருவில் வாறுகாலில் குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டுகிறேன்.
- பூமாரி, புளியங்குடி.
ஆபத்தான இரும்பு பெட்டி
சுரண்டையில் சங்கரன்கோவில் சாலையில் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் கட்டுப்பாட்டு பெட்டி உள்ளது. அந்த இரும்பு பெட்டி துருப்பிடித்து சாய்ந்த நிலையில் உள்ளது. அதன் அருகில் நின்று தான் பள்ளி குழந்தைகள் பஸ் ஏறி செல்கின்றனர். மேலும், அங்குள்ள ஏ.டி.எம். மையத்துக்கும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். எனவே, அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- சக்திவேல், சுரண்டை.
பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்
தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பகத்சிங் பஸ் நிலையத்துக்கு உள்ளே செல்லாமல், பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பின்னால் வரக்கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் சென்று பயணிகளை இறக்கி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- ரகுராமன், வீரபாண்டியன்பட்டினம்.
எலும்புக்கூடான மின்கம்பம்
உடன்குடி தேரியூரில் பழைய மின்கம்பம் ஒன்று சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இந்த மின்கம்பத்தை மாற்றுவதற்காக அருகில் புதிய மின்கம்பத்தை அமைத்து உள்ளனர். ஆனால், இன்னும் புதிய மின்கம்பத்துக்கு மின்இணைப்பை மாற்றவில்லை. அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பாக, ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்துக்கு ்இணைப்பை மாற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ஸ்ரீராம், உடன்குடி.