தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி'க்கு பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டியில் இருந்து பாரூர் செல்லும் வழியில் காளியம்மன் கோவில் உள்ளது. அங்கிருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையில் விவசாய நிலத்தில் அமைந்துள்ள மின்கம்பங்கள் அனைத்தும் ஒருபுறம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சாய்ந்த மின்கபங்களை சரி செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-உதயகுமாா், அரசம்பட்டி, கிருஷ்ணகிரி.
===
சுகாதார சீர்கேடு
தர்மபுரி நகரையொட்டி பிடமனேரி ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ளவர்கள் குப்பை, கழிவு பொருட்களை ஏரியில் கொட்டுகிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், பிடமனேரி, தர்மபுரி.
===
சாலை சீரமைக்கப்படுமா?
சேலம் அங்கம்மாள் காலனி அழகுமன்னர் தெருவில் சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டி பரப்பி விட்டனர். சாலையில் ஜல்லிக்கற்கள் பரவி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் எப்போதுதான் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தருவார்களோ என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-கண்ணன் அங்கம்மாள் காலனி, சேலம்.
===
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் வழித்தடத்தில் மிக குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை வேண்டும்.
-பாஸ்கர், தாரமங்கலம், சேலம்.
===
மைதானத்தில் நுழைந்த தெருநாய்கள்
சேலம் காந்தி ஸ்டேடியத்தில் தினமும் காலை, மாலை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் ஸ்டேடியத்தின் மைதானத்தில் தெருநாய்கள் அங்கும், இங்குமாக கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் தெருநாய்கள் படுத்து இருப்பதால் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தெருநாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மன அமைதியுடன் நடைபயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. எனவே தெருநாய்கள் ஸ்டேடியத்தின் மைதானத்திற்குள் வராதபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலை, அம்மாபேட்டை, சேலம்.
====
சுற்றுலா பயணிகளின் கவலை
ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்யும் நபர்களுக்கு படகிற்கான தனிக்கட்டணமும், படகில் செல்பவர்கள் உள்ளே செல்வதற்கான நுழைவுக் கட்டணம் என்று தனி தனி கட்டணம் வசூலிக்கிறார்கள். இது சுற்றுலா பயணிகளை பெரிதும் பாதிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
-மா.குமரன், ஆண்டிப்பட்டி, சேலம்.